காது கேளாதோர் மற்றும் செய்கை மொழி விழிப்புணர்வு பேரணி
*காது கேளாதோர் மற்றும் செய்கை மொழி வாரம் முன்னிட்டு செவித்திறன் மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. * திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காது கேளாதோர் மற்றும் செய்கை மொழி வாரத்தை முன்னிட்டு செவித்திறன் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படையான மற்றும் அன்றாட தேவைகளை புரிந்து கொள்ளும் வகையில் எளிமையான செய்கை மொழி கற்றுக் கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் பங்கேற்றார். செவித்திறன் குறைபாடு உடையவர்களின் மனித உரிமைகளை உணர்ந்து கொள்வதில் சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் அதன் முக்கியத்துவத்தை அனைவருக்கும் கொண்டு செல்லும் நோக்கத்துடன் சைகை மொழி வாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பேரணியில் செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்று செய்கை மொழி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு வாசகங்களை முழங்கியவாறு பேரணியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கண்ணன் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.