இரயில்களில் மூத்த குடிமக்களுக்கு சலுகை: எம்பியிடம் கோரிக்கை
ஓட்டப்பிடாரம் |

இரயில்களில் மூத்த குடிமக்களுக்கு சலுகை: எம்பியிடம் கோரிக்கை

60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இரயில்களில் பயணச் சலுகை கட்டணம் வழங்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா சார்பில் கனிமொழி எம்பியிடம் மனு அளிக்கப்பட்டது.   எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நடுவத்தின் கௌரவச் செயலாளர் ஆ. சங்கர் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனி மொழியிடம் நேரில் வழங்கிய மனு விவரம்: 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த இரயில்களில் பயணச் சலுகை கட்டணம் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வயதான மூத்த குடிமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆகவே மீண்டும் மூத்த குடிமக்களுக்கு இரயில்களில் பயணச் சலுகை கட்டணம் வழங்க மக்களவையில் இது குறித்து வினா எழுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும் மதுரை முதல் பெங்களுர் வரை செல்லவுள்ள வந்தே பாரத் இரயில் சேவையை தூத்துக்குடிக்கு நீட்டிக்க ஆவன செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி முதல் கோயம்புத்தூர் வரை சென்ற இரயில் பயண வசதியை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும். ஏற்கனவே இரயில்வே வாரியத்தால் அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி முதல் மேட்டுப்பாளையம், தூத்துக்குடி முதல் பாலருவி, தூத்துக்குடி முதல் பாலக்காடு ஆகிய இரயில் பயண வசதிகளை விரைவில் இயக்குவதற்கு ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


தமிழ் நாடு