சேலம்: முன்னாள் ராணுவத்தினர் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி
சேலம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க "முதல்வரின் காக்கும் கரங்கள்" திட்டத்தின் கீழ் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் 78-வது சுதந்திர தினத்தன்று (15. 08. 2024) சுதந்திர தின உரையின் போது முன்னாள் படைவீரர் நலனுக்காக "முதல்வரின் காக்கும் கரங்கள்" என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் எனவும், இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 3 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள், கைம்பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெற சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் மனுவினை சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.