
கொங்கணாபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மஞ்சள் ஏலம்
தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்திடும் எள், நிலக்கடலை, பருத்தி, பச்சை பயறு, கொப்பரை தேங்காய், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு விளை பொருட்கள் பொது ஏலம் மூலம் வேளாண் விற்பனை கூடத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் இந்த மையத்தில் மஞ்சள் விற்பனைக்கான பொது ஏலம் நேற்று தொடங்கியது. ஏலத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த விரலி மஞ்சள், குண்டு மஞ்சள், பனங்கால் மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு மஞ்சள் ரகங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. பொது ஏலத்தில் ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வருகை தந்த வியாபாரிகள் மஞ்சள் ரகங்களை மொத்த கொள்முதல் செய்தனர். பொது ஏலத்தில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ஒன்று ரூ. 12 ஆயிரத்து 99 முதல் ரூ. 15 ஆயிரத்து 899 வரை விற்பனையானது. இதேபோல் குண்டு ரக மஞ்சள் குவிண்டால் ஒன்று ரூ. 11 ஆயிரத்து 340 முதல் ரூ. 13 ஆயிரத்து 539 வரை விலை போனது. பனங்கால் ரக மஞ்சளானது குவிண்டால் ஒன்று ரூ. 19 ஆயிரத்து 869 முதல் ரூ. 25 ஆயிரம் வரை விற்பனையானது. அரசு ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சத்யா மேற்பார்வையில் நடந்த பொது ஏலத்தில் ரூ. 10 லட்சத்துக்கும் கூடுதலாக மஞ்சள் வியாபாரம் ஆனது.