சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம் கச்சுபள்ளி கிராமம், எட்டிக்குட்டை மேடு பகுதியில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இக்கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியான இக்கல்லூரியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்வதற்கான கட்டமைப்பு வசதிகள் முழு அளவில் இருந்த போதும், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இக்கல்லூரி மாணவர்கள் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டிக்கிடப்பதால், இப்பகுதியை சேர்ந்த பட்டதாரி மாணவர்கள் இளங்கலை கல்வியியல் பட்ட மேற்படிப்புக்காக அருகே உள்ள ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனியார் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் செலுத்தியும் நீண்ட தூரம் பயணம் செய்தும் கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும் பல கோடி ரூபாய் செலவு செய்து கொங்கணாபுரம் அருகே உள்ள எட்டிகுட்டை மேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள அரசு கல்வியியல் கல்லூரி கட்டிடம், போதிய பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி, சிதிலமடைந்து வருவதுடன் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
இந்த அவல நிலையினை அரசு கருத்தில் கொண்டு, விரைந்து இப்பகுதியில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரியை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.