அண்ணாமலையார் கோவிலில் துணை நிலை ஆளுநர் தரிசனம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று(செப்.17) புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கே. கயிலாசநாதன் சுவாமி தரிசனம் செய்தார். அதைெயாட்டி, அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில் வழியாக கோயிலுக்குள் சென்ற ஆளுநர், சுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தார். பின்னர், மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரம் முன்பு வணங்கிய ஆளுநர், அதைத்தொடர்ந்து 4ம் பிரகாரத்தில் உள்ள பைரவர் சன்னதியில் தரிசனம் செய்தார். அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு, கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. அப்போது, கலெக்டர் பாஸ்கரபாண்டியன், எஸ்பி பிரபாகர், கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கோயிலில் தரிசனம் முடிந்ததும், அங்கிருந்து புறப்பட்டு கிரிவலப்பாதையில் உள்ள ரமணாஸ்ரமத்தில் ஆளுநர் கயிலாசநாதன் வழிபட்டார். ஆளுநரின் வருகையை முன்னிட்டு, கோயிலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.