முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் மசாலாக்களை பயன்படுத்தி உணவுகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் கீழ் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், வடஆண்டாப்பட்டு ஊராட்சியில் காவேரி மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவிற்காக பாரம்பரிய முறையில் மசாலாப் பொருட்கள் தயாரிப்பு பணியை, கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, நம்முடைய வீடுகளுக்கு பயன்படுத்தும் தரத்தில் ரசாயன கலவை இல்லாத சுகாதார முறையில், முதன்மையான தரத்தில் மசாலா பொருட்களை தயார் செய்து காலை உணவு திட்டம் மற்றும் மதிய உணவு திட்டத்திற்கு வழங்க வேண்டும் எனமகளிர் சுய உதவி குழுவினரை கலெக்டர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சரண்யா தேவி மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.