
மக்களவையில் தி. மலை எம்பி வலியுறுத்தல்
திருவண்ணாமலை தொகுதி எம்பி சி. என். அண்ணாதுரை மக்களவையில் கேள்வி நேரத்தின்போது தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில் இணைப்பிற்காக ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் விபரங்களை தெரிவிக்க வேண்டும். தேசிய அளவில் மெட்ரோ ரயில் நெட்வொர்க் விபரங்களுடன், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகளின் நிலை குறித்தும் தெரிவிக்க வேண்டும். கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாடு முழுவதும் பல்வேறு மெட்ரோ ரயில் அமைப்புகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப முன்னேற்றங்களின் அடிப்படையில், தமிழகத்தில் மெட்ரோ திட்டங்களுக்கு பங்களிப்பு அளிக்கப்பட்டுள்ளதா என்பதையும் தெரிவிக்க வேண்டும். சென்னை போன்ற மிக முக்கியமான நகரங்களில், மெட்ரோ ரயில் இணைப்பு வளர்ந்து வரும் நகர்ப்புற இயக்கத் தேவைகளுக்கு இணையாக அமைக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டின் போக்குவரத்து தேவைகளுக்கு தகுந்தபடி, அதற்கான தீர்வுகளை ஏற்படுத்தும் வகையில் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். திட்டங்களை விரைந்து முடிக்கவும், காலதாமதத்தை தவிர்க்கவும், உரிய நேரத்தில் பணிகள் முடிவடைவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.