
திருச்சி உறையூரில் வெளி மாநில லாட்டரி விற்ற 2 பேர் கைது
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக உறையூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் மற்றும் போலீசார் விரைந்து சென்று வெளிமாநில லாட்டரி விற்பனை செய்த தில்லை நகர் காந்தி நகர் புது காலனி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (வயது 31), காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 29) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் வசம் இருந்த லாட்டரி சீட்டுகளின் ரகசிய குறியீட்டு எண்கள் எழுதிய சீட்டுகள் மற்றும் ரூபாய் 120 ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. திருச்சியில் எஸ்.வி.ஆர், வி.எல். நாகராஜ் போன்ற பெரும் லாட்டரி விற்பனையாளர்கள் மீது பரிசு பணம் தரவில்லை, பரிசுப் பணம் கேட்ட நபருக்கு கொலை மிரட்டல் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர் காவல்துறையினர். ஆனாலும் திருச்சியில் தொடர்ந்து மறைமுகமாக லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இந்த சிறு வியாபாரிகளுக்கு பரிசுத்தொகை பணத்தை தற்போது வரை எஸ்.வி.ஆர். மனோகரன் தான் வழங்கி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.