திருச்சி மாவட்டம், முசிறி அருகே எம். புதுப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முசிறி நகராட்சியுடன் எம். புதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அனைத்து கிராமங்களையும் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முசிறி அருகே தா. பேட்டை ஒன்றியத்தில் எம். புதுப்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது.
எம். புதுப்பட்டி ஊராட்சியை முசிறி நகராட்சியுடன் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு இன்று எம். புதுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது பொதுமக்கள் சார்பில் எம். புதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சிலோன் காலனி, பாரதி நகர், திருமுருகன் நகர் ஆகிய மூன்று பகுதிகளை மட்டும் முசிறி நகராட்சியுடன் இணைத்து கொள்ளலாம். ஏனென்றால் முசிறி நகரை ஒட்டிய பகுதியாக இந்த மூன்று இடங்களும் அமைந்துள்ளது. எஞ்சியுள்ள கிராம பகுதிகளை முசிறி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்து தீர்மானம் நிறைவேற்றினர். அப்போது பொதுமக்கள் நகராட்சியுடன் இணைக்கப்படுவதால் ஏற்படும் பாதகங்கள் பற்றி அதிகாரிகளிடம் காரசாரமாக பேசினர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.