திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மேய்க்கல்நாயக்கன்பட்டி என்ற இடத்தில் திருச்சி - நாமக்கல் சாலையில் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே நாகையநல்லூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திலிருந்து காட்டுப்புத்தூர் கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் சாலையை புதுப்பித்து தர வேண்டும், பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய குடிநீர் தொட்டி கட்டி தர வேண்டும், நாகையநல்லூரில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் துவக்க பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக இடிக்கப்பட்ட கட்டிடத்தை உடனடியாக கட்டித் தர வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி - நாமக்கல் சாலையில் மேய்க்கல் நாயக்கன்பட்டி என்ற இடத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முசிறி கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா, தொட்டியம் தாசில்தார் சேக்கிழார் முசிறி போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்குமார் தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் ஆகியோர் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கை குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்துபொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.