திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் தர கட்டுப்பாட்டு பிரிவில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் கிளிஸ்டன் ஆப்ரஹாம். இவரது மனைவி மெர்லின் மேத்யூஸ். இவர்களுக்கு எய்டன் (7), எரிக் (1 1/2) ஒன்றரை வயது இரண்டு மகன்கள் ஆவர். கணவன் மனைவி இருவரும் இன்று (பிப்ரவரி 7) காலை வேலைக்கு சென்று விட்டனர்.
வீட்டில் வேலை செய்யும் பெண் பணியாளர் காட்டூர் மான்போர்ட் பள்ளியில் படித்து வரும் எய்டன் சிறுவனை வீட்டு வாசலில் பள்ளிக்கு அனுப்ப வந்திருந்த வேனில் ஏற்றி விட்டார். அப்பொழுது பின்னால் வந்த எரிக் என்கின்ற ஒன்றரை வயது குழந்தை வேனின் பின்புற சக்கரத்தின் உள்ளே நின்றிருப்பது பணியாளரும் வேன் டிரைவரும் கவனிக்கவில்லை.
அடுத்த சில நொடிகளில் வேன் கிளம்பியதும் ஒன்றரை வயது குழந்தை வேன் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது. இதனை அடுத்து போலீசார் இறந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கவன குறைவாக விபத்து ஏற்படுத்தி குழந்தை சாவுக்கு காரணமான வேன் டிரைவர் சதீஷ்குமாரை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.