முசிறி அருகே திண்ணகோணம் கிராமத்தில் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அய்யாற்றுக்கு ஆரத்தி வழிபாடு. கொல்லிமலை அடிவாரமான புளியஞ்சோலையிலிருந்து வரும் அய்யாற்று தண்ணீர் பாலகிருஷ்ணம்பட்டி, எரகுடி, சேனப்பநல்லூர், வீரமச்சான்பட்டி, கண்ணனூர், திருத்தலையூர், பேரூர் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களை கடந்து முசிறி தாலுகாவில் பல்வேறு ஏரிகளை நிரப்பி வாத்தலை அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த அய்யாற்று தண்ணீர் மூலம் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் பாசன வசதி பெருகிறது. வானம் பார்த்த பூமியாக இருக்கும் பல விளை நிலங்களை சாகுபடி பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அய்யாற்று காட்டாற்று தண்ணீர் பேருதவி புரியும் நிலையில் திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள திண்ணக்கோணம் கிராமத்தில் அய்யாற்றில் ஆரத்தி வழிபாடு நடத்தி வழிபட்டனர். அப்போது மணல் திட்டில் வாழை இலையில் பச்சரிசி, பழங்கள், விதைநெல் ஆகியவற்றை வைத்து விவசாயிகள் படையல் இட்டனர். அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் விவசாயிகள் ஆரத்தி தீபம் ஏற்றி அய்யாற்றுக்கு வழிபட்டனர். அப்போது வருடந்தோறும் பருவமழை தவறாமல் பெய்து அய்யாற்றில் நீர் வரத்து இருக்க வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என வணங்கி பிரார்த்தனை செய்தனர்.