சேலம் அருகே காய்ச்சலுக்கு மாணவி பலி
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கணக்குப்பட்டி பிரிவை சேர்ந்தவர் ரத்தினசாமி, (45). இவரது மகள் ஜீவிதா, (15). தாரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு ஒரு வாரத்துக்கு முன் காய்ச்சல் அதிகம் இருந்ததால், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து பின் வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் (அக்.,2) மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. தாரமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தொடர்ந்து நேற்று (அக்.,3) காய்ச்சல் அதிகமாக ஓமலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ரத்தினசாமி தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார் அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.