சேலம்: மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி விபத்து ஆபரேட்டர் பலி
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள குட்டிமணி நகரை சேர்ந்தவர் பாக்கியராமன் (வயது 32). இவர் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி உஷா (29) இவர் திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கணினி உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இதனிடையே கணவன்-மனைவி 2 பேரும் நேற்று ஜலகண்டாபுரத்தில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் அவர்கள் வீடு திரும்பினர். எடப்பாடி புறவழி சாலையில், மல்லிபாளையம் அருகே வந்தபோது அவ்வழியாக செங்கல் பாரம் ஏற்றி வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பாக்கியராமன், உஷா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது பாக்கியராமன் ஏற்கனவே இறந்து விட்டதுதெரியவந்தது. மேலும் படுகாயம் அடைந்த உஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் பாக்கியராமனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.