சேலம்: மனைவி பிரிந்து சென்றதால் லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி மகன் சிவசக்தி (வயது 35). லாரி டிரைவர். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்கள் பிரிந்து தனித்தனியே வசித்து வந்தனர். சிவசக்தி மட்டம்பட்டி பகுதியில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வந்தார். மனைவியை பிரிந்து சென்றதால் சிவசக்தி மனமுடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்க சென்ற அவர் நேற்று காலை வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது சிவசக்தி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிவசக்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.