
திருவண்ணாமலை: வங்கி வாடிக்கையாளர்களுக்கு 7 கோடியில் கடன் உதவிகள்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை மூலம் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 7 கோடியில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டன. செங்கத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை உள்ள எம். எஸ். எம். ஆர். நகர் பகுதியில் புதிய ஏடிஎம் மையம் திறப்பு விழா மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வங்கி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மண்டல மேலாளர் ராஜசேகரன் தலைமை வகித்து வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், வங்கியில் தொழில் கடன், தனிநபர் கடன் பெறுவது குறித்தும் விளக்கிக் கூறினார். கிளை மேலாளர் புருசோத்தமன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு புதிய ஏடிஎம் மையத்தை திறந்துவைத்து, தனிநபர் கடன், விவசாயக் கடன், கல்விக் கடன், வாகனக் கடன் என வாடிக்கையாளர்கள் 35 பேருக்கு ரூ. 7 கோடியில் கடனுதவிகளை வழங்கினார்.