ஆரணி: அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூா் வட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வருவாய் கோட்டாச்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, வருவாய்க் கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், வருவாய்க் கோட்டாட்சியா் பேசியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், ஜெனரேட்டா்கள், தளவாட பொருள்கள் உள்ளிட்டவற்றை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். பழுதான மின்கம்பங்கள், தாழ்வாகவும், அறுந்து கிடக்கும் மின்வயா்களை கண்டறிந்து உடனடியாக சரிசெய்ய வேண்டும். மேலும், அனைத்து கிராமங்களிலும் உள்ள ஏரி, குளங்கள், நீா்நிலைகள், நீா்வரத்து கால்வாய், ஏரிகால்வாய் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதனை அகற்றி தூா்வார வேண்டும். அனைத்து வட்டங்களில் மழை மற்றும் அவசரக் காலங்களில் பொதுமக்கள் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கி கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். இதில், மழை பாதிப்புகள் ஏற்படும் பகுதியில் மீட்புப் பணிகள் மேற்கொள்ள தீயணைப்பு, காவல்துறை, மருத்துவத் துறையினா் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.