
திருச்சி: பாமக நிர்வாகியின் பேக்கரியில் ஒரு லட்சம் திருட்டு
திருச்சி உறையூரில் பாமக நிர்வாகி பேக்கரியை உடைத்து ஒரு லட்சம் பணம் பொருட்கள் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலை. திருச்சி உறையூர் வெக்காளியம்மன் நகரை சேர்ந்தவர் ஆர். கே. வினோத். திருச்சி மத்திய மாவட்ட பாமக அமைப்பு தலைவர். இவர் திருச்சி உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை மெத்தடிஸ்ட் மேல்நிலைப் பள்ளி அருகில் பேக்கரி மற்றும் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இன்று காலையில் வினோத் மற்றும் ஊழியர்கள் கடையை திறக்க வரும்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கடையில் ஷட்டர் கதவுகளை உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து திருச்சி மத்திய மாவட்ட பாமக செயலாளர் உமாநாத், மாவட்ட அமைப்பு தலைவர் வினோத் மற்றும் நிர்வாகிகள் உறையூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர். இதுகுறித்து உறையூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து பழைய குற்றவாளிகள் பட்டியலை எடுத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.