
திருச்சி: ஹோட்டல் அதிபரை மிரட்டி பணம் பறித்த 3 ரவுடிகள் கைது
திருச்சி அரியமங்கலம் கணபதி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மகன் மாரிமுத்து (வயது 33). இவர் அப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று(டிச.28) இவர் அரியமங்கலம் தொழிற்சாலை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது விலை உயர்ந்த அதிநவீன பைக்கில் குடிபோதையில் வந்த மூன்று ரவுடிகள், இவரை மிரட்டி பணம், கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இதுகுறித்து மாரிமுத்து அரியமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக வரகனேரி ஆனந்தபுரம் மேட்டுதெருவை சேர்ந்த முகமது முபாரக் (வயது 32), அரியமங்கலம் மேலம்பிகாபுரத்தைச் சேர்ந்த லோகு என்கிற லோகநாதன் (வயது 31), அரியமங்கலம் மேலம்பிகாபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்கிற கூல் தினேஷ் (வயது 26) ஆகிய மூன்று பேரை கைது செய்தார். அவர்களிடமிருந்து பெரிய வாள், கோடாரி, சில்லி பவுடர் ஸ்பிரே பாட்டில், பிரேஸ்லெட், அதிநவீன பைக், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் இவர்கள் மூவரும் ரவுடி சரித்திரப் பட்டியலில் உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.