கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய தொழிற்சங்கம் போராட்டம்
ஒரத்தநாடு |

கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய தொழிற்சங்கம் போராட்டம்

காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 25-இல் தர்னா போராட்டம் நடத்துவது என சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் இந்த அமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் அமைப்பின் மாநிலப் பொதுச் செயலர் எஸ். ராஜேந்திரன் தெரிவித்தது: தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள 65 ஆயிரம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலியை வாரியமே வழங்க வேண்டும். பகுதி நேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய அனைத்து வட்ட மேற்பார்வையாளர் அலுவலகங்கள் முன் பிப். 25-ஆம் தேதி தர்னா போராட்டம் நடத்துவது, இதற்குப் பிறகும் தீர்வு கிடைக்காவிட்டால், ஏப்ரல் மாதத்தில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது என்றார். கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் டி. ஜெயசங்கர் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலப் பொதுச் செயலர் ஜி. சுகுமாரன், மாநிலச் செயலர் சி. ஜெயபால், பொருளாளர் எம். வெங்கடேசன் ஆகியோர் பேசினர். அமைப்பின் துணைப் பொதுச் செயலர்கள் கே. ரவிச்சந்திரன், டி. பழனிவேல், பீர்முகமது, ஆர். ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


தமிழ் நாடு