முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டப் பணிகள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறுகிற மக்கள் நேர்காணல் முகாம், மக்களுடன் முதல்வர், உங்களைத் தேடி உங்கள் ஊரில் போன்ற அனைத்து முகாம்களிலும் மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அறிவுறுத்தி வருகிறார்கள்.
ஏழை, எளியோருக்கு எதிர்பாராமல் ஏற்படுகிற மருத்துவ சிகிச்சைக்கான பெரும் தொகையினை அரசே செலுத்தி அவர்களின் துயர் துடைக்கும் அற்புதத் திட்டம் தான் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடுத் திட்டமாகும்.
இதற்கு காப்பீட்டு அட்டை வழிவகை செய்கிறது. காப்பீட்டு அட்டை பெற குடும்ப அடையாள அட்டை, புகைப்படம், ஆதார் அட்டை, ரூ. 120, 000 க்குள் வருமானச் சான்று ஆகியவற்றை இ-சேவை மையத்தில் ரூ. 60-ஐ செலுத்தி அனைவரும் விண்ணப்பித்து காப்பீட்டு அட்டை பெறலாம்.
மருத்துவ காப்பீட்டு அட்டைகளை பட்டுக்கோட்டை துவரங்குறிச்சியில் மக்களுடன் முதல்வர் முகாமில் விண்ணப்பித்த நாளிலேயே பெற்ற பயனாளிகள் துவரங்குறிச்சி (தெற்கு) கிராமத்தைச் சேர்ந்த சந்திரா (வயது 60), ரவி (வயது 48) ஆகியோர் முகாமில் விண்ணப்பித்தவுடன் உடனடியாக காப்பீட்டு அட்டை கிடைக்க உதவி செய்த முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜத்திடம் நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் நன்றியுடன் தெரிவித்தார்கள்.