
தஞ்சையில் இருந்து திருப்பதிக்கு தினசரி ரயில் இயக்க கோரிக்கை
தஞ்சையில் மூத்த குடிமக்கள் பேரவை 38வது ஆண்டு விழா மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. சட்ட ஆலோசகர் அன்பரசன், இணைச் செயலாளர் குருநாதன் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் பழனிவேலு வரவேற்றார். தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி கலந்து கொண்டு 75 வயது நிரம்பிய மூத்த குடி மக்களுக்கு சால்வை அணிவித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட கருவூல அலுவலர் கணேஷ்குமார் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். பொதுச்செயலாளர் சேதுராமன், பொருளாளர் சுப்ரமணியன், துணைத் தலைவர் திருமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மூத்த குடிமக்களுக்கு கொரோனா காலத்திற்கு முன்பு வழங்கப்பட்ட ரயில் கட்டணம் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். குடும்ப உறுப்பினர் பராமரிப்பு இல்லாத முதியோர்களுக்கு தஞ்சையில் அரசு செலவில் ஓய்வு விடுதி ஏற்படுத்தித் தர வேண்டும். தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவக் கல்லூரி செல்லும் பேருந்துகள் அனைத்தும் மேம்பாலம் வழியாக இயக்கப்படுகிறது. ரயில் நிலையம், மேரிஸ் கார்னர் பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி சில பேருந்துகளை ரயில்வே ஸ்டேஷன் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சையிலிருந்து திருப்பதிக்கு புதிய ரயில் இயக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.