தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை (பிப். 10) நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவையொட்டி, தஞ்சாவூர் வட்டத்துக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
இக்கோயிலில் குடமுழுக்கு விழா விக்னேஸ்வர பூஜையுடன் பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், யாகசாலை பூஜைகள் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து யாக பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை காலை 9. 45 மணியளவில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.
இதையொட்டி, தஞ்சாவூர் வட்டத்துக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் திருக்குடமுழுக்கு விழாவையொட்டி, திங்கள்கிழமை (பிப். 10) தஞ்சாவூர் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் (பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்) உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 22 ஆம் தேதி பணி நாளாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.