ஆன்லைன் பதிவுகளை செய்ய நெருக்கடி செவிலியர்கள் சங்கம் கவலை

80பார்த்தது
ஆன்லைன் பதிவுகளை செய்ய நெருக்கடி செவிலியர்கள் சங்கம் கவலை
தஞ்சாவூரில், தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமை மாநில தலைவர் இந்திரா தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி மாநிலத் தலைவர் இந்திரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் கடந்த டிசம்பர் மாதம் 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். அப்போது, அரசு செயலாளர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு ஆரம்ப சுகாதாரத்துறை இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் எந்தப் பலனும் இல்லை.
மேலும், சமூக நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வந்த முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி திட்டத்தை, செவிலியர்கள் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய கூறி வருகின்றனர். ஆன்லைனில் பதிவு செய்வதற்கு, உரிய தொகை வழங்கப்படவில்லை.
முத்துலட்சுமி ரெட்டி திட்டம் மட்டுமல்ல, பல்வேறு ஆன்லைன் பதிவு செய்யும் வேலையை வழங்குவதால், பொதுசுகாதாரத் துறையில் சேவையாற்றி வரும் தடுப்பூசி போடும் எங்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. அத்துடன் இதனால், தடுப்பூசி போடும் போன்ற மருத்துவ சேவை குறைபாடு நிகழும் அபாயம் உள்ளது.
ஆன்லைன் பதிவுக்கு தனியாக அலுவலரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி, வரும் 12 ஆம் தேதி (புதன்கிழமை) முதல் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு செல்ல உள்ளோம்" என்றார்.

தொடர்புடைய செய்தி