
கும்பகோணத்தில் வங்கி ஊழியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி ஊழியர் சங்க மாநகர தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மண்டல அமைப்பு செயலாளர் சங்கர், இணை உதவியாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், வங்கியில் உள்ள அனைத்து காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியர் நல சலுகைகளுக்கு விதித்த வருமான வரியை வங்கிகளே ஏற்க வேண்டும். வாரத்திற்கு 5 நாட்கள் வேலையை அமல்படுத்த வேண்டும். பணிக்கொடை உச்சவரம்பை ரூ. 25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் கோபாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் விஜய் திலக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.