ராமநாதபுரம்: வயல்களில் தேங்கிய நீரை வெளியேற்ற கூடுதல் செலவு
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. திருவாடானை தாலுகாவில் தொடர் மழைகாரணமாக 30க்கு மேற்பட்ட கிராமங்களில் நெல்விதை முளைக்கும் பருவத்தில் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அவற்றை வெளியேற்ற கூடுதல் செலவு செய்து விவசாயிகள் சிரமப்படுகின்றனர். மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து மானாவாரியாக நெல்சாகுபடி பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர். குறிப்பாக திருவாடானை தாலுகாவில் நெல்சாகுபடி பணிகள் மும்முரமாக நடக்கிறது. உழவு பணிகளை முடித்த விவசாயிகள்வயல்களில் நெல் விதைத்துள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் செங்கமடை, அஞ்சு கோட்டை, குஞ்சம்குளம், சின்னக்கீர மங்கலம், மங்களக்குடி, ஆண்டா ஊருணி உள்ளிட்ட 30 க்கு மேற்பட்ட கிராமங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் விதை முளைப்பு தன்மை வெகுவாக பாதிக்கும் என்பதால் கூலி ஆட்களை பயன்படுத்தியும், மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றப்படுகிறது. இவ்வாண்டு பயிர் வளர்ச்சி முன்பே செலவு அதிகரித்துள்ளதாக என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.