மின்சாரம் தாக்கி மின் கம்பத்திலேயே உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர்
வலங்கைமான் மின் பிரிவில் உயர் அழுத்த மின்பாதையில் மின்சாரம் முறையாக வழங்கப்படாமல் ஒரு பேஸில் நேரடியாக மின்சாரம் வழங்கப்பட்டு வந்துள்ளது. இது குறித்து வலங்கைமான் மின்வாரியத்தில் பணியாற்றும் போர்மேன், ஒயர்மேன் ஆகியோருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படாமல் உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவி மின் பொறியாளர்கள் அலட்சியமாக பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று(செப்.22) அன்னியமங்கலம் என்ற இடத்தில் உயர்அழுத்த மின்பாதையில் ஜம்பர் கட்டாகி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மின்வாரிய போர்மேனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மின்வாரிய போர்மேன் உத்தரவின் பேரில் ஒப்பந்த ஊழியரான ஒயர் மேன் குருமூர்த்தி ஜம்பர் கட்டாகி மின்சாரம் தடையாகி இருந்த உயர்அழுத்த மின்கம்பத்தில் ஏறியபோது விதிமுறைகளுக்கு முரணாக ஒரு பேஸில் (கம்பியில்) நேரடியாக மின்சாரம் சென்று கொண்டிருப்பதை அறியாமல் அதில் கை வைத்துள்ளார். அப்போது அவர் மின்சாரம் தாக்கி உடல் கருகி மின்கம்பதிலேயே பரிதாபமாக உயிரழந்தார். பின்னர் வலங்கைமான் தீயணைப்பு துறை ஊழியர்கள் மின்கம்பத்தில் உயிரழந்த குருமூர்த்தியின் உடலை கீழே கயர்கட்டி இறக்கினர். இதுகுறித்து வலங்கைமான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த குருமூர்த்தியின் உடலை உடல்கூறு ஆய்விற்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.