விநாயகர் சதுர்த்தி விழா இன்று(செப்.7) சனிக்கிழமை கொண்டாடப்படும் நிலையில் அரசு அனுமதி அளித்த உயரத்தில் மண்ணால் ஆன விநாயகர் திருமேனியை நன்னிலம் பகுதியில் பல இடங்களில் உள்ள விநாயகர் கோவில் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
அதன்படி நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள சன்னாநல்லூர், மாப்பிள்ளைகுப்பம், பூந்தோட்டம், பேரளம், ஸ்ரீவாஞ்சியம் உள்ளிட்ட பகுதிகளில் 38 இடங்களில் வண்ண வண்ண விநாயகர் திருமேனிகள் நிறுவப்பட்டு விநாயகருக்கு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் திருமேனியை அந்தந்த இடங்களில் அருகே உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
இந்த வருடம் வருகின்ற 8 ஆம் தேதி மாலை நன்னிலம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அனைத்து விநாயகர் திருமேனிகளும் ஊர்வலமாக எடுத்துச் சென்று முடிகொண்டான் ஆற்றில் கரைக்கப்பட உள்ளது. இதுகுறித்து நன்னிலம் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் சொல்லும் போது "இந்த விழா சமுதாய ஒற்றுமை விழாவாக கொண்டாடப்படுகிறது. அனைத்து மதத்தினரும் இதில் கலந்து கொள்கின்றனர். ஒவ்வொரு வருடமும் நன்னிலம் பகுதியில் அதிகமாக விநாயகர் திருமேணி நிறுவப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இதனால் நாடு நலம் பெறுகிறது என்றும், விவசாயம் செழிக்கிறது " என்றும் கூறினார்.