பேருந்து நிலையத்தில் கடைகள் ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி

72பார்த்தது
நன்னிலத்தில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் நன்னிலம் பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. பேருந்து நிலையத்தில் 24 கடைகள் கட்டப்பட்டு வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்பகோணம், திருவாரூர், திருச்சி, காரைக்கால் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதியிலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 43 பேருந்துகள் வந்து செல்கின்றது.

இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைக்கப்படாததால் பயணிகள் வெயிலிலும் மழையிலும் நிற்கும் நிலை உள்ளது. மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள டீக்கடை, மற்றும் பேன்சி ஸ்டோர், பேக்கரி உள்ளிட்ட கடைகள் பயணிகள் நிற்கும் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பொருட்களை வைத்துள்ளன.

பயணிகள் நடப்பதற்கு கூட வழியில்லாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். பேருந்து நேரக் காப்பாளர் அறை மூடப்பட்டு பயணிகள் அமரும் இடத்தில் போக்குவரத்து நேர காப்பாளர் அமர்ந்து பணி செய்து வரும் நிலை உள்ளது. குறிப்பாக பள்ளி கல்லூரி விடும் நேரத்தில் பள்ளி மாணவ, மாணவியர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். நன்னிலம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளை அப்புறப்படுத்தியும், பயணிகள் வெயில் மற்றும் மழையில் பாதிக்காத அளவிற்கு மேற்கூரை அமைத்து தர வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்தி