சேலம்: போலீசாரை பணி செய்ய விடாத வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
சேலம் ஆட்டையாம்பட்டி பாலாஜி நகரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சக்கரவர்த்தி (வயது 27). இவர் கடந்த மாதம் 21-ந்தேதி கடத்தூர் ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்தார். அங்கு வந்த சின்னசீரகாப்பாடியை சேர்ந்த அய்யனாருக்கும், இவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சக்கரவர்த்தி, அய்யனாரின் தோள்பட்டையில் அரிவாளால் வெட்டி அவரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டார். இதே போன்று முன்விரோதம் காரணமாக ஆட்டையாம்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணனையும் அவர் தாக்கினார். இந்த புகார் குறித்து விசாரணை நடத்த சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் சக்கரவர்த்தி தடுத்து உள்ளார். இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டு சக்கரவர்த்தி சேலம் சிறையில் உள்ளார். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் வேல்முருகன் பரிந்துரை செய்ததையொட்டி சக்கரவர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய டி. ஐ. ஜி. உமா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சேலம் சிறையில் உள்ள சக்கரவர்த்தியிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை போலீசார் வழங்கினர்.