சேலம் மாவட்டம், வீரபாண்டி வட்டாரம், கல்பாரப்பட்டி புதுப்பாளையம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் காட்டுவளவு , கல்பாரப்பட்டி, ஊத்துக்கிணத்துவளவு, மினியனூர், சேவாம்பாளையம், கொம்பாடிப்பட்டி, புதுப்பாளையம், ரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதியிலிருந்து 300 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியை மற்றும் அங்கு பணிபுரியும் ஆசிரியர் ஆகியோர் பள்ளியில் பாடம் நடத்தாமல் தனிமையில் இருந்து வருவதாக பெற்றோர்கள் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து இவர்கள் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தாமல் ஏமாற்றி வந்ததை அறிந்த பெற்றோர்கள் அப்பகுதி ஒன்றிய கவுன்சிலர் மணிவண்ணிடம் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் கவுன்சிலர் மற்றும் பெற்றோர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாமில் மனு அளித்துள்ளனர். மேலும், ஆசிரியர் பெற்றோர்களை மிரட்டும் பாணியில் எந்த அதிகாரிக்கு வேண்டுமானாலும் மனு கொடுங்கள் அது என்னிடம் தான் வரும் அதை நான் கவனித்துக் கொள்கிறேன் மிரட்டி வருவதாகவும், மாணவ மாணவிகளின் நலன் கருதி இது போன்ற ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளனர். மனுவைப் பெற்ற அதிகாரிகள் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.