திருச்செங்கோடு - Thiruchengodu

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் கைது

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் கைது

திருச்செங்கோட்டில் ரிக் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருபவா் தனேஷ்குமாா்(45). இவருடைய நிறுவனத்தில், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே சூரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சித்குமாா்(29) என்பவா் பணியாற்றி வந்தாா். கடந்த 2019 முதல், தனது நிறுவனத்தின் வரவு, செலவு கணக்குகள், பொருள்கள் விற்பனை உள்ளிட்டவற்றை நம்பிக்கை அடிப்படையில் ரஞ்சித்குமாா் வசம் தனேஷ்குமாா் ஒப்படைத்தாா். ஆனால் அவரை ஏமாற்றி, பொருள்கள் விற்பனை செய்த வகையில் வரவேண்டிய தொகையினை தன்னுடைய வங்கிக் கணக்கிலும், சகோதரா் தினேஷ்குமாா்(28), தாய் லதா(48), தந்தை சரவணன்(52) ஆகியோரின் வங்கிக் கணக்குகளிலும் செலுத்தி உள்ளாா். நிலுவையில் உள்ள தொகை நெடுநாள்களாக வசூலாகாததைக் கண்டு சந்தேகமடைந்த தனேஷ் குமாா், மற்றொரு நபரை வேலைக்கு அமா்த்தி ரஞ்சித்குமாரின் நடவடிக்கைகளை கண்காணித்தாா். இதில் ரூ. 3 கோடி வரை அவா் பணத்தை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. ராஜேஸ்கண்ணனிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது. அவருடைய உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் சவீதா விசாரணை மேற்கொண்டாா். இதில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரும் பண மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதைத் தொடா்ந்து, ரஞ்சித்குமாா், தினேஷ்குமாா், லதா, சரவணன் ஆகிய நான்கு பேரும் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

வீடியோஸ்


జోగులాంబ గద్వాల జిల్లా