
வெங்கடேசபுரம்: அம்மன் கோயிலில் திருட்டு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வெங்கடேசபுரம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற மகா மாரியம்மன் கோவில் பூசாரி ராஜேந்திரன் நேற்று வழக்கம் போல் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் கதவின் பின் பக்க பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த 12 கிராம் தங்க தாலிச் செயினை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூபாய் 1லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து ராஜேந்திரன் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான காவல் துறையினர் விரைந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் சரண்யா, கவுசல்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகையை பதிவு செய்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.