
கோவை: செலவு செய்ததை தட்டி கேட்ட தாய்க்கு அடி, உதை
கோவை வெள்ளானைப்பட்டி கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபாகரன். ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி ரேணுகாதேவி (58). இந்நிலையில் ரேணுகாதேவி, நீலிகோணாம்பாளையம் பகுதியில் இருந்த பிரபாகரனின் வீட்டை ரூ. 40 லட்சத்திற்கு விற்றார். பின்னர் அந்த பணத்தை ரூ. 10 லட்சம் வீதம் தனது மகன்களுக்கு பிரித்து கொடுத்தார். மீதி பணத்தை தனது கணவரின் வங்கி கணக்கில் வைத்து மருத்துவ செலவுகளை கவனித்து வந்தார். சம்பவத்தன்று ரேணுகாதேவி இருகூரில் உள்ள தனது மகன் பிரதீப் (24) வீட்டிற்கு சென்றார். அங்கு தனது மகன் பிரதீப்பிடம், ரேணுகாதேவி, பிரபாகரனின் வங்கி கணக்கில் எவ்வளவு தொகை இருப்பு உள்ளது என்று கேட்டுள்ளார். அதற்கு பிரதீப் பணம் முழுவதும் காலியாகி விட்டது என்றுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரேணுகாதேவி, பிரதீப்பிடம் மருத்துவ செலவுக்கு சிறிய தொகை தானே எடுத்துள்ளோம், எப்படி காலியானது, செலவு செய்து விட்டாயா என கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரதீப், தனது தாயார் ரேணுகாதேவியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். இதுகுறித்து சிங்கநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரதீப்பை கைது செய்தனர்.