கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் 7-வது மலர்க் கண்காட்சி நேற்று (பிப்ரவரி 08) கோலாகலமாகத் தொடங்கியது. வண்ண வண்ணப் பூக்களால் உருவாக்கப்பட்ட கண்கவர் உருவங்கள் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தின.
வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் கண்காட்சியைத் திறந்து வைத்தார். மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். 25 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்த மலர்க் கண்காட்சியில், நுழைவாயில் முதல் இறுதி வரை பூக்களால் ஆன தோரணங்கள், அலங்கார வளைவுகள், யானை, முயல், கலைமகள், அன்னப்பறவைகள் போன்ற பல்வேறு உருவங்கள் கண்ணைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அரிதான வாசனை வீசும் உலர் மலர்களின் அலங்காரம் மற்றும் தமிழகத்தில் கிடைக்கும் 60-க்கும் மேற்பட்ட பழ வகைகளின் காட்சிப்படுத்தல் ஆகியவை கண்காட்சியின் சிறப்பு அம்சங்களாகும். கனகாம்பரம் முதல் ஆர்கிட் வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பூக்கள் இங்கு இடம்பெற்றுள்ளன. மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத் தோட்டத்துக்கான கிட்கள் விற்பனைக்கும் பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள், பல்வேறு ஸ்டால்கள், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், வேளாண் தொழில்முனைவை ஊக்குவிக்கும் கருத்தரங்குகள் ஆகியவை கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெறுகின்றன. முதல் நாளிலேயே ஏராளமான பள்ளிகளில் இருந்து குழந்தைகள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.