

கோவை: சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் 13 மணி நேர சோதனை
கோவை அ. தி. மு. க மாநகர் மாவட்ட செயலாளரும் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒன்பது பேர் நேற்று (பிப்.25) காலை முதல் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனை அடுத்து அவரது வீட்டில் முன்பு முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, செங்கோட்டையன் மற்றும் அ. தி. மு. க சட்டமன்ற உறுப்பினர்கள் தொண்டர்கள் குவிந்தனர். சுமார் 13 மணி நேர சோதனைக்குப் பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சென்ற நிலையில் அவரது இல்லத்தில் திரண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அ. தி. மு. க தொண்டர்கள், மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அம்மன் அர்ஜுனனை வரவேற்றனர். வீட்டை விட்டு வெளியே வந்த அம்மன் அர்ஜுனன் தொண்டர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களிடம் அம்மன் கே அர்ஜுனன் பேசும்போது, இந்த சோதனையானது கால்புணர்ச்சியால் செய்யப்பட்டதாகவும், 2 கோடி 75 லட்சம் தனது வங்கிக் கணக்கில் உள்ளதாகவும், 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.