கோவை, வெள்ளியங்கிரி அடிவாரத்தில் அமைந்துள்ள பூண்டி ஆண்டவர் கோவிலில் நேற்று இரவு ஒரு காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்தது. பக்தர்களால் தென் கைலாயம் என்று போற்றப்படும் வெள்ளியங்கிரி சிவன் கோவிலுக்கு சிவராத்திரி மாதங்களில் செல்ல நீதிமன்ற அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். பக்தர்களுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் மூன்று வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது.
நேற்று இரவு, அன்னதான கூடத்திற்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, அங்கு வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை தின்னத் தொடங்கியது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், பக்தர்களின் உதவியுடன் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. யானை புகுந்து உணவுப் பொருட்களை தின்ற சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.