
திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கு; நான்கு அதிகாரிகள் மாற்றம்
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவில் காவல் ஆய்வாளர் உட்பட 4 போலீசார் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சியைச் சேர்ந்த திமுக மூத்த அமைச்சர் கே.என். நேருவின் தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம் கொலை வழக்கில் பல வருடங்கள் ஆகியும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து, விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த காவல் ஆய்வாளர் சண்முகவேலை திருச்சி மாநகர சைபர் க்ரைம் பிரிவுக்கும், தலைமைக் காவலர்கள் ராஜபிரபு, தனசேகரன் ஆகியோரை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவுக்கும், தலைமைக் காவலர் பிலிப்ஸ் பிரபாகரனை மாநகர குற்றப்பிரிவுக்கும் மாற்றி திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் தங்களது விருப்பத்தின் பேரில் இடமாற்றம் உத்தரவை பெற்றதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு பதிலாக யாரும் நியமிக்கப்படவில்லை. தற்போது விசாரணைக் குழுவில் டிஐஜி வருண்குமார், எஸ்.பி. ராஜாராம், ஏடிஎஸ்பி கிருஷ்ணன், டிஎஸ்பிக்கள் மதன், செந்தில்குமார், கல்பனா, ஆய்வாளர்கள் ஞானவேலன், குமார், கருணாகரன் மற்றும் 8 எஸ்.ஐ.க்கள், 3 எஸ்.எஸ்.ஐ.க்கள், 10 தலைமைக் காவலர்கள், 2 இரண்டாம் நிலைக் காவலர்கள், ஒரு காவலர் என மொத்தம் 33 பேர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.