பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த 8-ந்தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இவ்விழா வரும் ஏப்ரல் 15-ந்தேதி வரை நடைபெறுகிறது. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பங்குனி தேரோட்டம் வரும் 30-ந்தேதி நடைபெறுகிறது. தேர்திருவிழாவின் முதல் நாளான நேற்று உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 11. 0511.05 மணியளவில் கொடிமரம் அருகே வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்தனர். அப்போது மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தின் போது கோவில் யானை அகிலா கொடிமரங்களுக்கு மரியாதை செலுத்தியது. முக்கிய நிகழ்ச்சியான 6-ம் நாளான 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பங்குனித் தேரோட்டம் காலை 7.20-க்கு நடைபெறவுள்ளது. இதில் சுவாமியும், அம்மனும் தனித்தனி பெரிய தேர்களில் எழுந்தருளி தேரோட்டம் கண்டருளுகின்றனர்