சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலையில் இருந்து திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படத்தை வைத்து பூக்களுடனும், சமயபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் பூத்தட்டுகளை கையில் ஏந்தியும் வாணவேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி பயபக்தியுடன் வணங்கினர்.
அதனைத் தொடர்ந்து மாலையில் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதயாத்திரையாக வந்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூக்களை ஏந்தி காந்தி மார்க்கெட், பெரிய கடை, தெப்பக்குளம், அண்ணா சிலை வழியாக சமயபுரம் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று பூக்களை சாற்றி வழிபட்டனர். அப்போது வழிநெடுகிலும் பக்கங்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சமயபுரம் பூச்சொரிதல் விழாவையொட்டி திருச்சி விழாக்கோலம் பூண்டு உள்ளது