சேலம்: களைகட்டிய ஆயுதபூஜை.. பொரி, கடலை விற்பனை ஜோர்
இந்துக்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான ஆயுத பூஜையை முன்னிட்டு வீடுகளில் மட்டுமின்றி தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், மோட்டார் தொழிற்சாலை, கல்வி நிறுவனங்களில் சுண்டல், சர்க்கரை பொங்கல், பொரி, அவல், பழங்கள் உள்ளிட்டவை படையலிட்டு வழிபடுவதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆயுதபூஜையும், நாளை (சனிக்கிழமை) விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜையை கொண்டாடும் வகையில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களை சுத்தம் செய்து வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகளில் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் ஈடுபட்டனர். பூஜைக்கு பொரி, கடலை மற்றும் பூஜை பொருட்கள் செவ்வாய்பேட்டை, கடைவீதி, பால் மார்க்கெட், வின்சென்ட், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை பகுதிகளில் உள்ள கடைகளிலும், சாலையோரமாக தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்த கடைகளிலும் மக்கள் வாங்கிச் சென்றனர். பொரி, கடலை, அவல், வெல்லம், நாட்டு சர்க்கரை, எள் உருண்டை, கற்கண்டு, தேங்காய் விற்பனை மும்முரமாக நடந்தது. ஒரு பக்கா பொரி ரூ. 20-க்கும், 6½ கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ. 650-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் தேங்காய், வாழைப்பழம், மா இலை, வாழைக்கன்று, அலங்கார தோரணங்கள் மற்றும் பூஜை பொருட்களின் விற்பனையும் ஜோராக நடந்தது.