

சேலம் மாநகர் மாவட்ட அ. தி. மு. க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை கொண்டாடுவது குறித்து சேலம் மாநகர் மாவட்ட அ. தி. மு. க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலம் சங்கர்நகரில் உள்ள மண்டபத்தில் நடந்தது. அவைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ஜி. வெங்கடாஜலம், முன்னாள் எம். எல். ஏ. க்கள் ரவிச்சந்திரன், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் எம். கே. செல்வராஜூ, ஏ. கே. எஸ். எம். பாலு ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் அ. தி. மு. க. அமைப்பு செயலாளர் சிங்காரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 4 ரோட்டில் இருந்து ஊர்வலமாக வந்து அண்ணா பூங்காவில் உள்ள மணிமண்டபத்தில் ஜெயலலிதா, எம். ஜி. ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. அங்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த ஊர்வலத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளவேண்டும். இதே போன்று 60 வார்டுகளிலும் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செய்து அன்னதானம் வழங்கி நலஉதவிகள் வழங்க வேண்டும். ஜெயலலிதா பிறந்த நாளில் எடப்பாடி பழனிசாமியை முதல்- அமைச்சராக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றார்.