சேலம் டவுன் போலீஸ் நிலையம் சார்பில், பொதுமக்கள், போலீஸ் நல்லிணக்க கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார். போலீஸ் உதவி கமிஷனர் ஹரி சங்கரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: -
சேலம் மாநகரில் போதைப் பொருட்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி போதைப்பொருட்கள் விற்பவர்கள் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களை பிடித்து கைது செய்து வருகிறோம். போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாநகர பகுதியில் அவரவர் தெருக்களில் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த பொதுமக்கள் முன் வரவேண்டும்.
கோவில் விழாக்கள், பண்டிகை காலங்களில் பல்வேறு தரப்பினரிடம் பணம் வசூலித்து இசை கச்சேரி நடத்தி கொண்டாடுவது போல், பணம் வசூல் செய்து அவரவர் வசிக்கும் தெருக்களில் தரமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு சில நேரங்களில் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும் போது அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தால் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இதில் பொதுமக்கள், போலீசார் பலர் கலந்து கொண்டனர்.