சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடத்தக்கோரி தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் அதன் நிறுவன தலைவர் தனியரசு தலைமையில் சேலம் கோட்டை பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் செந்தில்குமார், நிர்வாகிகள் விஸ்வநாதன், வேலு, கோபி, ஒன்றிய செயலாளர்கள் கார்த்திக், சேட்டு, சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனை தொடர்ந்து தனியரசு நிருபர்களிடம் கூறுகையில், அனைத்து சமுதாய மக்களின் இடஒதுக்கீடு உரிமைகளை மீட்கும் வகையில் உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதற்கு அடுத்த கட்டமாக அனைத்து சமுதாய தலைவர்களையும் அழைத்து பேசி நாமக்கல், கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 80 சதவீதத்திற்கு மேல் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுகிறது. நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல்வேறு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய பா. ஜனதா அரசு ஒவ்வொரு மாநிலத்தின் உரிமைகளையும் பறித்து வருகிறது, என்றார்.