சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜான். பிரபல ரவுடியான இவர் மீது 2 கொலை வழக்கு உள்பட 7 வழக்குகள் விசாரணையில் உள்ளன. பிரபல ரவுடி செல்லத்துரையின் கூட்டாளியான ஜான், மற்றொரு ரவுடியான சூரியின் மகன் நெப்போலியனை கொலை செய்ததாக வழக்கு உள்ளது. பின்னர் செல்லத்துரைக்கும், ஜானுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.
இதனால் செல்லத்துரையை தீர்த்துக்கட்ட திட்டமிட்ட ஜான் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செல்லத்துரையை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மற்றொரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ரவுடி ஜான் கடந்த 21-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் கடந்த 24-ந் தேதி அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒருவரிடம் வழிப்பறி செய்ததாக பாலமுருகன், ஜான், சின்னவர் ஆகிய 3 பேர் மீது கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
இதற்கிடையே, நேற்று கொலை வழக்கு ஒன்றில் சேலம் 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ரவுடி ஜான் ஆஜரானார். பின்னர் ரவுடி ஜான் தனது மனைவியுடன் காரில் வெளியே வந்தார்.
அப்போது, கோர்ட்டு வாசலில் காத்திருந்த கிச்சிபாளையம் போலீசார் அவரது காரை சுற்றி வளைத்து ஜானை வலுக்கட்டாயமாக இறக்கி அங்கு தயாராக இருந்த போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வேகமாக சென்று விட்டனர்.