சேலம் மாவட்ட கல்வி மீளாய்வு கூட்டம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் சேலம் குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளி பார்வை, மாணவர் சேர்க்கை விவரம், மாணவர்களுக்கான ஆதார், எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், பள்ளி மேலாண்மைக் குழு, பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற திட்டக் கூறுகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு பின்னர் கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது: -
சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 332 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் மொத்தம் 1 லட்சத்து 82 ஆயிரத்து 44 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிகளில் அடிப்படை வசதிகளை வழங்குதல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, கல்வி தொடர்பான போக்குவரத்து, சத்துணவு திட்டங்கள், சுகாதார சேவைகள் மற்றும் பள்ளிகளில் கற்பித்தல் முறைகள், மாணவர்களின் செயல் திறன் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கு உரிய முயற்சிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து மாணவர்கள் பள்ளி இடைநிற்றல் இல்லாத நிலையை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.