சேலத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது இதன் காரணமாக சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி உபரி நீர் அருகில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் புகுந்தது. மேலும் சிவதாபுரம் பகுதியில் சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த பணிகள் இரவு வரை தொடர்ந்து நடைபெற்றது. மேலும் ஏரி தண்ணீர் குடியிருப்புகளில் புகாமல் இருக்க தடுப்பு பணிகள் நேற்று இரவு நடந்தது. இந்த பணிகளை கலெக்டர் பிருந்தா தேவி நேரில் சென்று ஆய்வு செய்தார்.