சேலம் மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மேயர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் ரஞ்ஜீத்சிங், துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர் சரவணன் பேசும்போது, கருங்கல்பட்டி பகுதியில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் எரிவதில்லை. மேலும் மூங்கில்பாடி பள்ளியில் 2, 600 மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளிக்கு தினமும் 2 தூய்மை பணியாளர்கள் அமர்த்தி பள்ளியை அவ்வப்போது சுத்தப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
கவுன்சிலர் இமயவர்மன், நமக்கு நாமே திட்டம் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த 3-ல் 1 பங்கு பணம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் அந்த திட்டப்பணிகள் தொடங்கப்படவில்லை. நமக்கு நாமே திட்டப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். அந்தந்த வார்டில் திட்டப்பணிகள் தொடக்க விழாவில் கல்வெட்டில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அதிமுக கவுன்சிலர் யாதவமூர்த்தி பேசும் போது தற்போது தி. மு. க. ஆட்சியில் அந்த திட்டப்பணிகள் முழுமை பெறவில்லை. நிர்வாக சீர்கேட்டால் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின்சார இணைப்பு கூட பெற முடியவில்லை. இதற்கு காரணம் என்ன? தகுதி இல்லாதவர்களுக்கு மாநகராட்சி திட்டப்பணிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது. எனவே இந்த செயல்களை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறினார்.