கொங்கணாபுரம் கால்நடை சந்தையில் ஆடு, கோழி விற்பனை ஜோர்
சேலம் மாவட்டத்தின் முக்கிய ஆடு வளர்ப்பு பகுதியான மேச்சேரி, பெரும்பாலை, மற்றும் கர்நாடக மாநில எல்லையோர மலை கிராமங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான இறைச்சிக்கான ஆடுகள் கொங்கணாபுரம் கால்நடை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். இங்கு வழக்கமாக ஆடு, கோழி விற்பனை களை கட்டும். ஆனால் புரட்டாசி மாதம் தொடங்கியதை அடுத்து அங்கு ஆடு, கோழி விற்பனை குைறந்தது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி புரட்டாசி மாதம் விடைபெற்ற நிலையில், நேற்று கொங்கணாபுரம் கால்நடை சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை ஜோராக நடந்தது. அதிகரிப்பு சுமார் 8 கிலோ முதல் 10 கிலோ வரை எடையுள்ள இறைச்சிக்கான ஆடு ஒன்று ரூ. 7 ஆயிரத்து 500 முதல் ரூ. 9 ஆயிரம் வரை விற்பனையானது. இதேபோல் அதிக அளவில் இறைச்சிக்கான நாட்டுக்கோழிகள், சண்டை சேவல்கள் ஆகியவை விற்பனைக்கு ெகாண்டு வரப்பட்டிருந்தன. இறைச்சிக்கான நாட்டுக்கோழி (உயிருடன்) கிலோ ஒன்று ரூ. 520 முதல் ரூ. 640 வரை விற்பனையானது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் இறைச்சிக்கான தேவை அதிகரித்து வருவதால், கொங்கணாபுரம் கால்நடை சந்தையில் ஆடு மற்றும் கோழிகள் விற்பனை வழக்கத்தை விட இந்த வாரத்தில் அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.